கடந்த சில வாரங்களாக கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர், வரதராஜன் நாடகங்களை தொடர்ந்து பார்த்து வரும் எனக்கு இம்முறை ஒய்.ஜி.மகேந்திரனின் 'நாடகம்' எனும் நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தி.நகர் திருமலை சாலையில் உள்ள ஒய்.ஜி.பி. குடும்பத்தார் நிர்வகிக்கும் பி.எஸ்.பி.பி. பள்ளியின் ஒய்.ஜி.பி. ஆடிட்டோரியத்தில் சனி மாலை ஆறு மணிக்கு சென்ற நான் டிக்கட் விலை குறித்து விசாரித்தபோது கிடைத்த பதில்: "இன்று மெட்ராஸ் சிட்டி வக்கேஷன்ஸ் ரியல் எஸ்டேட் சார்பாக இலவசமாக இந்நாடகத்தை நடத்துகிறோம்" என்று இன்ப அதிர்ச்சி தந்தனர். இதற்கு முன்பு நான் ஒய்.ஜி. நாடகத்தை பார்த்ததில்லை என்பதால் எதிர்பார்ப்புக்கும் பஞ்சமில்லை.
யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்(UAA) வழங்கும் 'நாடகத்தின் கதை': சுபாகரன் என்பவர் ஒரு நாடக ட்ரூப் வைத்திருக்கிறார். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நாடக கலைஞர்களுக்கு 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வருகிறது ஒரு சோதனை. தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பை தமிழகத்தில் தொடங்குகிறது என்பதே அது. டி.வி.யின் வரவால் நாடகங்கள் இறங்குமுகத்தை சந்திக்கும் என சலசலப்பு எழுகிறது. ஆனால் அதற்கெல்லாம் அசரவில்லை சுபா. பல சோதனைகளை தாண்டி தன் மகனுக்கு நல்ல படிப்பை தருகிறார். ஆனால் அவனோ நாடகங்களை முற்றிலும் வெறுக்கிறான். இதுபோக வேறொரு அதிர்ச்சியும் சுபாகரனை ஆட்கொள்ள அவர் எப்படி அதை சந்திக்கிறார் என்பதே கதையின் சுருக்கம். கதை, வசனம் சித்ராலயா ஸ்ரீதர். நாடகமாக்கம், இயக்கம் ஒய்.ஜி.மகேந்திரன்.
சுபாவாக ஒய்.ஜி.மகேந்திரன். 62 வயதிலும் என்ன ஒரு அமர்க்களமான பெர்பான்ஸ். தன்னை பழித்து பேசும் மகனை கண்டு கோபமுறுவதாக இருக்கட்டும் அல்லது 'கல்யாணி, கல்யாணராமன், கல்யாணம்' வசனத்தை அச்சு பிசகாமல் பேசுவதாகட்டும்...ஹாட்ஸ் ஆப் சார். நாடக ரத்தம் ஒவ்வொரு அணுவிலும் ஊறியிருந்தால் மட்டுமே இப்படி சிரிப்பு, சீரியஸ் என மாற்றி மாற்றி இரண்டரை மணிநேரம் நம்மை தன் நடிப்பால் ஒரு கலைஞன் கட்டிப்போட முடியும். சென்னை பாஷை பேசுபவராக வரும் பிருந்தா மற்றும் குள்ள இயக்குனராக வந்து சபையை குலுங்க வைத்த சுப்புணி இருவருக்கும் பல சபாஷ்களை போடலாம். தன் கணவரின் உடல்நிலை குறித்து அழும் காட்சியில் தேர்ந்த மூத்த நடிகை என்பதை நிரூபித்துள்ளார் பிருந்தா.
கண் தெரியாத நடிகையாக வரும் மதுவந்தி(மகேந்திரனின் மகள்). ஓரளவுக்கு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதை மேலும் சிறப்பாக்கி இருப்பது அவருக்காக எழுதப்பட்ட வசனங்கள். அக்காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் நடக்கையில் கூட 'ஹரே ரமா ஹரே கிருஷ்ணா' நாடகத்தை மகேந்திரன் வெற்றிகரமாக நடத்தியது, எமெர்ஜென்சி காலத்தில் ஹெரான் ராமசாமி அவர்களின் 'தேவாசுர யுத்தம்' நாடகத்தில் 'இந்திரா உன்னை பதவியில் இருந்து இறக்குகிறேன்' என்று வரும் வசனத்திற்காக ஏற்பட்ட பிரச்னைகள், தூர்தர்ஷன் தமிழகத்தில் துவங்கப்பட்ட முதல் நாளில் போடப்பட்ட திரைப்படம் 'தில்லானா மோகனாம்பாள்' என பல தகவல்களின் களஞ்சியமாக திகழ்கிறது இந்த நாடகம்.
விடுதலை போராட்ட வீரர்களை அங்கீகரிப்பதில் வாஞ்சிநாதனுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்து வரும் ஆட்சியாளர்களை ஒரு பிடி பிடித்துள்ளார் ஒய்.ஜி. அதை ஒரு வசனத்தில் சொல்கிறார் இப்படி: "வாஞ்சிநாதன் ஐயர்...க்ராஸ்(பூணூலை காட்டுகிறார்). அதனால அவரை கண்டுக்கறது இல்லை". ஓரிரு இடங்களில் இரட்டை அர்த்த வசனங்களை வைத்திருப்பது நெருடலாக இருந்தது. இடைவேளையில் போது ஸ்பான்சர்கள் தமது ரியல் எஸ்டேட் நிறுவனம் பற்றி சில நிமிடம் பேசினார்கள். குலுக்கலில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு மனைமீது 20% தள்ளுபடி உண்டாம். தற்போது அனைத்து கலைஞர்களின் நாடகங்களும் ரியல் எஸ்டேட் ஆட்களால் மட்டுமே ஸ்பான்சர் செய்யப்படுகின்றன. நடக்கட்டும்.
நவீன சாதனங்களின் வளர்ச்சியால் நாடகங்கள் எப்படி பின்னடைவை சந்திக்கின்றன, நாடகத்திற்காக தன வாழ்வை அர்ப்பணிக்கும் கலைஞன் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அச்சிரமங்களை எப்படி எதிர்கொள்கிறான் என நாடகத்தை மட்டுமே மையமாக கொண்டு முற்றிலும் சுழலும் இந்த படைப்பு மேடை நாடக வரலாற்றில் ஒரு மைல் கல். வெறும் ஹாஷ்யங்களை மட்டுமே அள்ளித்தெளிக்கும் நாடகங்களுக்கு மத்தியில் சிரிப்புடன் சேர்த்து சிறந்த நடிப்பு, நல்ல கதையம்சம் போன்றவற்றை கொண்ட இந்த 'நாடகம்' நான் பார்த்ததிலேயே தி பெஸ்ட் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மினி இயக்குனர் சுப்புணியின் அமர்க்கள நடிப்பு..நாடகம் தொடங்குவதற்கு முன்பாக 'உங்கள் செல்போனை அணைக்கவும் என்று' என மைக்கில் இருமுறை அறிவித்தனர். அதன் பின் சீரியசாக ஒய்.ஜி.நடித்துக்கொண்டு இருக்கையில் முன்வரிசையில் இருந்த ஒருவர் பேசிக்கொண்டு இருக்க அவரை முறைத்துப்பார்த்தார். பின்பு கோபமாக "அதுதான் முன்னமே சொன்னமே. அப்பறமும் எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க. இனிமே பேசுனா ப்ளே நடக்காது. கேன்சல்தான்" என்றார். ஆனால் போட்டோ எடுக்க அனுமதி இல்லை என்று சொல்லவில்லை. என்றாலும் மேலுள்ள படங்களை சற்று திகிலுடனே படம் பிடித்தேன்.
நாடகத்தை பார்க்க வந்த வி.ஐ.பி. 'சிவாஜி வீட்டு வாரிசு' துஷ்யந்த். அவரிடம் சிறிது நேரம் பெர்சனலாக பேசியபின், ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களை சந்தித்து பேசினேன். "இந்நாடகம் பார்க்க தொடங்கும் முன் தங்களிடம் பத்து நிமிடம் மட்டும் பேச எண்ணினேன். ஆனால் பார்த்து முடித்ததும் நிறைய பேச வேண்டி உள்ளது" என்றேன். விரைவில் சந்திப்போம் என உறுதி அளித்து செல் நம்பரையும் தந்தார். "ஏனைய நாடகங்களில் சிரித்துவிட்டு மட்டுமே வீட்டுக்கு செல்வீர்கள். அதைத்தாண்டி சில கருத்துகளையும் கலப்பதுதான் எங்கள் குழு நடத்தும் நாடகங்களின் தனித்தன்மை" என்று கூறி விட்டு விடை பெற்றார் மகேந்திரன். நாடகக்கலை பற்றிய புரிதலும், நல்ல நகைச்சுவையும் வேண்டுவோர் கண்டிப்பாக 'நாடகம்' பாருங்கள் என பரிந்துரை செய்கிறேன்.
நாடகம் - நாடக உலகின் பொக்கிஷம்
Photos: agsivakumar.com
Location: YGP Auditorium, T.Nagar, Chennai.
.....................................................................................
..................................
My other site:
..................................
......................................................
சமீபத்தில் எழுதியது:
......................................................


