DEFEAT THE DEFEAT BEFORE THE DEFEAT DEFEATS YOU

Sunday, February 13, 2011

INSIDE JOB





                                                                                  
சிறந்த டாகுமெண்டரி படத்திற்கான ஆஸ்கார் ரேசில் இருக்கும் படம்தான் இன்சைட் ஜாப். 2008 உலகை தாக்கிய பொருளாதார பூகம்பத்தை அலசி ஆராய்கிறது.  அந்த பேரதிர்வில் சம்மந்தப்பட்ட பல்வேறு தரப்பினரின் பேட்டி, பல நாடுகளில் எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பு, பின்னணியில் நிகழ்வுகளை சொல்லும் மாட் டாமனின் குரல்..இவைதான் படத்தின் அம்சங்கள். டிக்கட் வாங்கும் இடத்தில் எனக்கு முன்பாக இருந்த நபர் டிக்கட் குடுப்பவரை பார்த்து "என்னது பிரெஞ்சு படமா?" என அலறினார். ஆகக்கா. நமக்கு சற்று கிர்ரானது. "சப் டைட்டிலாவது போடுவீங்களா?" என்றேன். போடுவோம் என்றார். ஆனால் உள்ளே போனால் 100% ஆங்கில படமாகத்தான் இருந்தது. எஸ்கேப்! 2000 முதல் 2009 ஆம் ஆண்டு வரை நடந்த நிகழ்வுகளை தெளிவாக விவரிக்கிறது இன்சைட் ஜாப்.


ஐஸ்லாண்ட் நாட்டில் தொடங்குகிறது பொருளாதார வீழ்ச்சியின் முதல் அதிர்வு . சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் முன்னணியில் அந்த தேசம் இருந்து வந்த காலத்தில் ஏற்பட்ட அதிர்வு படிப்படியாக அமெரிக்காவை நெருங்குகிறது. வங்கிகள் மூலம் பெறப்பட்ட வீட்டுக்கடனில் பலர் நாலைந்து வீடுகளை அமெரிக்காவில் வாங்குதல், வார இறுதியை அதிக செலவு செய்து கொண்டாடி கழித்தல் என்று நாட்கள் நகர்கின்றன. சிறு அதிர்வு மிகப்பெரிய விரிசலை உண்டாக்கப்போகிறது என பொருளாதார வல்லுனர்கள் சொல்லியும் எவரும் செவிசாய்க்கவில்லை.  2000 முதல் 2007 வரை உலகின் பெரிய வங்கிகளை சேர்ந்த மேலதிகாரிகள் கோடிக்கணக்கான பணத்தை 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்'கின்றனர். 2008 செப்டம்பர்.. லீமன் பிரதர்ஸ் வங்கி பெரும் சரிவை சந்திக்க ஆரம்பிக்கறது. அடுத்து சிட்டி க்ரூப், ஏ.ஐ.ஜி., மெரில் லின்ச், கோல்டன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, ஜே.பி. மார்கன் என பல சாம்ராஜ்யங்கள் ஆட்டம் காண ஆரம்பிக்கின்றன.


                                                                

கிளிண்டன், புஷ் மற்றும் ஒபாமா போன்றவர்கள் எடுத்த நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் பெரிய வங்கிகளின் முதன்மை அதிகாரிகள் தாங்கள் செய்த முறைகேடுகளுக்கு பதில் அளிக்க  இயலாமல் சமாளித்தல், ஒவ்வொரு வருடமும் நடந்த ஏற்ற இறக்கங்களை பல்வேறு புள்ளிவிவரங்களுடன் முன்வைத்தல் என அனைத்தையும் சபையில் வைக்கிறார் இயக்குனர் சார்லஸ் பெர்குசன். படம் முழுக்க தன் குரலால் அற்புதமாக விவரிக்கிறார் புகழ் பெற்ற நடிகர் மாட் டமன். (பார்ன் அல்டிமாடம் படத்தின் மூலம் என்னை கவர்ந்தது இவரது நடிப்பு. சிறந்த த்ரில்லர் படம் பார்ன் அல்டிமாடம். இதற்கு முன் பார்க்காதவர்கள் விருப்பம் இருந்தால் கண்டிப்பாக பார்க்கவும்).


                                                                       மாட் டமன்
                                                      

இன்சைட் ஜாப். குறிப்பிட வேண்டியவை:

* ப்ளோரிடா மாகாணத்தில் வருமானம் இன்றி வீடுகளை இழந்து தற்காலிக டென்ட் வீட்டில் மக்கள் குடி இருப்பது, வங்கிகள் போடும் போட்டியால் பொது மக்கள் சொத்துக்களை இழப்பது போன்ற காட்சிகள்.

* சீனாவில் பெரும்பான்மையானோர் வேலை இழந்து தவிப்பது, சொர்க்கபுரியாக இருந்த சிங்கப்பூர் பெரிய பாதிப்பினை சந்தித்தது குறித்து அந்நாட்டவர் பேசுவது என பல.


* நீதிமன்றத்தில் பிரபல வங்கியின் மேலதிகாரி நீதிபதியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் "மன்னித்து விடுங்கள். இனி இவ்வாறு நடக்காது. நம்புங்கள்" என்கிறார். அதற்கு நீதிபதி "மக்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள். தங்கள் வங்கியில் எவரேனும் கொள்ளை அடித்து விட்டு 'மன்னிக்க. இனி இவ்வாறு நடக்காது. நம்புங்கள்' என்றால் ஒப்புக்கொள்வீர்களா? "

* திரைப்பட டீம் பல பெரிய தலைகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் பேச மறுத்து விட்டனராம். ஹார்வார்ட், கொலம்பியா யுனிவர்சிட்டி நிர்வாகம் உட்பட.

* ஒரு வல்லுனரிடன் பேட்டி எடுக்கையில் "பெரிய வங்கி முதலாளிகளிடம் இந்த பெரும் சரிவை சந்தித்து கொண்டிருந்த கால கட்டத்திலாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கலாமே? " என கேட்கின்றனர். அதற்கு அந்த பெண்மணி "சொன்னோம். அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. எங்களால் ஆட்டத்தை (முறைகேடு) நிறுத்த இயலாது.  மியூசிக்(பணம் சம்பாதிக்கும் தருணம்) முடியும் வரை ஆட்டம் தொடரும் என்றனர். ஆனால் அதற்கு முன்பே மியூசிக் நிறுத்தப்பட்டு விட்டது அவர்களுக்கு தெரியாது".

* திவால் ஆன வங்கிகளை பெரிய வங்கிகள் வாங்கியது, குறிப்பாக லீமன் பிரதர்சை இங்கிலாந்தின் பார்க்லேய்ஸ் நிறுவனம் வாங்க முனைந்தது, வணிகம் துவங்க நினைப்பவர்களை போதை பொருள் மற்றும் பெண்களை வைத்து பெரிய வங்கிகள் மடக்குவது என அனைத்தையும் போட்டு உடைக்கிறது இந்த திரைப்படம். உலக பிரசித்தி பெற்ற நியுயார்க் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் அருகில் இதற்கென பல நூறு பெண்கள் தொழில் செய்தது, சீனாவில் பொருளாதார பேரிடியின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டி என அனைத்தையும் பதிவு செய்கிறது படம்.

* இந்த சரிவை எதிர்நோக்கும் முன் செல்வ செழிப்பில் அமெரிக்கர்கள் இருந்த நிலையை கிண்டல் அடிக்கும் காட்சி ஒன்று. பணம் சம்பாதித்து குவிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த பலரின் மூளையை அறிவியல் சோதனைக்கு ஆட்படுத்தி பார்க்கையில் வந்த ரிசல்ட்:  "கோகைன் போதை மருந்தை உட்கொண்டவனின் மூளை என்ன பாடு படுமோ அதே நிலைதான் பணவெறி  பிடித்தவர்களின் மூளைக்கும் உள்ளது"


                                                    சார்லஸ் பெர்குசன் - இயக்குனர்   


இந்த வருட ஆஸ்கர் விருதை பெற இன்சைட் ஜாப் பொருத்தமான படம்  என்பதில் எவ்வித ஐயமும்  இல்லை. முடிவு தெரிய இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்க  வேண்டும்.

இன்சைட் ஜாப் - மிகச்சிறந்த டாகுமெண்டரி படம். காணத்தவறாதீர்!



ட்ரைலர்: 




இன்னும்...

இதற்கு முன் திரை அரங்கில் நான் பார்த்த ஒரே டாகுமெண்டரி படம் - Farenheit 9/11. அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 9/11 தாக்குதல் பற்றி எடுக்கப்பட்டது. ஜார்ஜ் புஷ் மற்றும் அவரது ஆட்சியின் அவலங்களை கிழித்தார் இயக்குனர் மைக்கேல் மூர். அதில் ஒரு காட்சி(உண்மை சம்பவம்). படக்குழு அமெரிக்க நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வரும் எம்.பிக்களை சந்தித்து கேட்கும் கேள்வி "இராக்கில் நம் ராணுவ வீரர்கள் பலர் உயிரை இழக்கின்றனரே. உங்கள் புதல்வர்களை நீங்கள் இராக் போருக்கு அனுப்ப தயாரா? ". இந்த கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறி அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர் பலர்.


                                                              
  
கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிக நேரம் ஸ்டாண்டிங் ஒவேசன் பெற்ற படம் என்ற பெருமையை Farenheit 9/11 இன்றுவரை தக்கவைத்து கொண்டுள்ளது என்பது செய்தி. டைம் இருந்தா இதையும் பாருங்க. மீண்டும் சந்திப்போம்!

..........................................
Pics: Google.
'பயணம்' விமர்சனம் என் மற்றொரு தளத்தில்: madrasbhavan.blogspot.com



0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...