DEFEAT THE DEFEAT BEFORE THE DEFEAT DEFEATS YOU

Monday, February 27, 2012

லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி!!


                          1980 - ஒலிம்பிக் தங்கத்துடன் பாஸ்கரன்(இடமிருந்து   மூன்றாவதாக)

முன்பொரு காலத்தில் சர்வசாதாரணமாக ஒலிம்பிக் தங்கங்களை அள்ளி வந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி இறுதியாக தங்கம் வென்றது 1980 ஆம் ஆண்டு. அப்போதைய அணியின் கேப்டன் தமிழகத்தின் பாஸ்கரன் அவர்கள். அதற்குப்பின் வந்த ஒலிம்பிக் போட்டிகளில் முறையே 5,6,7,8 ஆம் இடங்களை மட்டுமே பெற்று யானை தேய்ந்து சிற்றெறும்பு ஆன கதையாகிவிட்டது. இந்திய ஹாக்கி சரித்திரத்தில் முதன் முறையாக சென்ற 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியே பெறாமல் போய் பெருத்த அவமானத்தை தேடிக்கொண்டனர் நமது வீரர்கள்(!). 

டெல்லியில் நேற்றிரவு நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டியில்  பிரான்சை 8-1 எனும் கோல் வித்தியாசத்தில் வென்று ஒருவழியாக லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது ஆடவர் அணி. டென் ஸ்போர்ட்ஸ் தயவில் மகளிர், ஆடவர் பைனல் இரண்டையும் காண முடிந்தது. இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே உடன் ஆடினால் கூட லைவ் அடிக்கும் டி.டி. சேனல்,தேசிய விளையாட்டான ஹாக்கி ஆட்டத்தின் முக்கியமான போட்டியை கண்டுகொள்ளவே இல்லை. நல்லா வருது வாயில. மகளிர் அணி தோற்றுப்போனாலும் ஆடவர் அணி எதிரிகளை அடித்து நொறுக்கியது. முதல் பாதி ஆட்டத்தினூடே தொழில்நுட்ப கோளாறால் அடிக்கடி ஜெர்க் அடித்து டென்சனை ஏற்றியது டென் ஸ்போர்ட்ஸ். பிறகு சரியாக தெரிய ஆரம்பித்தது.  

மொத்தம் ஆறு போட்டிகளில் தொடர்ந்து கோல் மழை பொழிந்து அனைத்து போட்டிகளையும் வென்றுள்ளது இந்தியா. அதுவும் பைனலில் 5 கோல்களை அடித்து அசத்தினார் சந்தீப் சிங். பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றி சந்தீப் ஆடிய விதம் அருமை. ஐஸ்க்ரீம் ஸ்கூப்பை(பந்து) லாவகமாக எடுத்து வாயில்(கோல்) அவர் தள்ளியதை கண்டிருக்க வேண்டும் நீங்கள். பிரான்ஸ் அணி கோல் அடிக்க முடியாத கடுப்பில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட ஸ்ட்ரிக்ட் ஆன தெ.ஆப்ரிக்க நடுவர் ஸ்பாட் தந்தனை தந்து ஆப்படித்தார். 

                                        நேற்று வென்ற தக தக தங்க கோப்பையுடன்!! 

மொத்த ஸ்டேடியமும் நிரம்பி வழிந்தது. குறிப்பாக ஹாக்கிக்காக பெரும் ரசிகர்களை கொண்ட பஞ்சாப் மக்கள் இறுதிவரை ஹை டெசிபலில் கத்தி நமதணிக்கு ஆதரவு தந்தனர். ஒருபக்கம் இந்திய அணியின் சரமாரி தாக்குதல். மறுபக்கமோ ரசிகர்களின் கூச்சல். பாவம் பிரான்ஸ் வீரர்கள். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய வீரர்களின் சட்டையை பிடித்து இழுக்கவும் செய்தனர். வீடியோ ரெபரல்கள் அனைத்தும் இந்தியாவிற்கு சாதகமாகவே அமைந்தது. போட்டி முடிந்ததும் 'க்ரிக்கட் ஜீரோ. ஹாக்கி ஹீரோ' என்று எழுதிய அட்டையை காட்டினார் ரசிகர் ஒருவர். தோனி பார்த்திருப்பாரோ?

ஒலிம்பிக் வாய்ப்பை கோட்டை விட்ட மகளிர் அணியும் சோகமே உருவாக அரங்கில் இருந்தது. அடுத்த முறை கலக்குங்க மேடம்ஸ். கவலை வேண்டாம். விருதளிக்கும் நிகழ்ச்சியில் மூன்று முறை ஒலிம்பிக் தங்கம் பெற்றுத்தந்த அந்தக்கால ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் வந்திருந்தது சிறப்பு. ஆட்ட நாயகன் மற்றும் தொடரில் அதிக கோல்(16) அடித்ததற்கு ஒரு கோப்பை மற்றும் பல்சர் பைக்கை தட்டிச்சென்றார் சந்தீப் சிங். எப்போதுமே ஒழுக்கம் காக்கும் இந்திய அணிக்கு Fair Play Team விருது கிடைத்தது சாலப்பொருத்தம். சிறந்த கோல் கீப்பராக போலந்தின் மரியுஸும், தொடர்நாயகனாக சர்தார் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.           

                                                மைக்கேல் நாப்ஸ் -   குருவே போற்றி!!

இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் முக்கிய காரணமாக இருப்பவர் ஆஸி நாட்டை சேர்ந்த கோச் மைக்கேல் நாப்ஸ். 2016 ஒலிம்பிக் போட்டிவரை நமதணிக்கு பயிற்சி தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுண்டைக்காய் அணிகளை ஏகப்பட்ட கோல் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் செல்ல இந்தியாவை தயார்படுத்தியதே சிறப்பான செயல்தான். ஆனால் இவருக்கு சரியான சோதனை லண்டனில்தான் ஆரம்பம். ஜாம்பவான் அணிகளான ஆஸி, ஜெர்மனி போன்றவற்றை வெல்லுதல் மிகக்கடினமான ஒன்று. 

என்னதான் லாவகமாக ஆடினாலும், ஐரோப்பா வீரர்களின் முரட்டு ஆட்டம் மற்றும் டெக்னிக்கல் பலத்தை எதிர்கொண்டு வெற்றிக்கோடு நாட்டுவது லேசுப்பட்ட காரியமல்ல. அதிலும் இந்திய அணிக்கு எதிராக வெளிநாட்டு நடுவர்கள் தீர்ப்பு சொல்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இவற்றை எல்லாம் தாண்டி வெண்கல பதக்கம் வெல்வதே பெரிய சாதனைதான். அதுவும் இந்தியா தங்கம் வென்றுவிட்டால் இந்திய விளையாட்டு வரலாற்றில் திருப்புமுனையாக அமையும். காத்திருப்போம் ஜூலை வரை..

                                               லண்டனில் இருக்குது வானவேடிக்கை!! 

இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதினால் பாரத் - பாகிஸ்தான் பந்த் வந்தது போல் இருநாட்டு தெருக்களும் வெறிச்சோடி கிடக்கும். அதெல்லாம் அனல் தெறிக்க இந்திய-பாக் ஹாக்கி டீமுங்க மோதுற  போட்டிக்கு முன்னால ஜஸ்ட் 25% தான் பாஸ். நேரம் கெடச்சா வர்ற ஒலிம்பிக்ல இவங்க மோதுறதை மறக்காம பாருங்க. அப்பறம் சொல்லுங்க. 

லண்டனில் தங்கம் வெல்ல இந்திய அணிக்கு வாழ்த்துகள்!!
......................................................................................... 

.............................
My other site:
madrasbhavan.com                                                                 
..............................
                             

4 comments:

Philosophy Prabhakaran said...

DD Sports சேனலில் காட்டியிருப்பார்கள் என்று நினைக்கறேன்...

Philosophy Prabhakaran said...

இப்ப போற ஸ்பீடை பார்த்தால் மெடல் வாங்கிடுவாங்கன்னு தான் தோணுது...

Arunagiri said...

” 'க்ரிக்கட் ஜீரோ. ஹாக்கி ஹீரோ' என்று எழுதிய அட்டையை காட்டினார் ரசிகர் ஒருவர். தோனி பார்த்திருப்பாரோ? “

பார்த்தால் மட்டும் என்ன செய்யப்போறாங்க? எனிவே.. அருமையான ஆட்டம். பாவம் பிரான்ஸ் ஆட்டக்காரர்கள். நொந்துபோய்விட்டார்கள்.

குணசேகரன்... said...

proud to be an indian.Hope our team member will get cup..

Related Posts Plugin for WordPress, Blogger...